Arimaசர்வதேச அரிமா சங்கத்தினர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் இயக்குனர்களுக்கும் இடையேயான சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. ஜோ ப்ரெஸ்டன், தலைவர், சர்வதேச அரிமா சங்க அமைப்பு, தலைமை தாங்கினார்.

திரு. ஜோ ப்ரெஸ்டன் கூறியதாவது: “இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் ஊர்களில் அரிமா சங்கங்கள் இயங்கிவருகின்றன. பெருநிறுவனங்கள் பொது சேவைகளில் ஈடுபடவேண்டும் என விரும்பினால், அவைகளுக்கு அரிமா சங்கத்தின் முழு ஆதரவை வழங்கிட தயாராக உள்ளோம். அரிமா அமைப்பு 98 வருடங்கள் பழமையானது. எனவே, சேவைகளை வழங்கும்போது நிறுவனங்களுக்கு சரியான வழிக்காட்டுதலை வழங்கிட அரிமாவின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் பெரும் பங்குவகிக்கும்.”

திரு என்.எஸ். சங்கர், சர்வேதேச இயக்குனர், அரிமா சங்கம், பேசுகையில்: “நிறுவனங்கள் பொது சேவைகளில் ஈடுபடவேண்டும் என்பது தற்போது நமது அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்களின் லாபத்தில் இரண்டு சதவிகிதத்தை சமுதாய சேவைகளுக்காக நிறுவனங்கள் ஒதுக்கவேண்டும் என்பது தற்போதைய விதியாகும். மற்ற தொண்டு நிறுவனங்களைக் காட்டிலும் திட்டங்களை நிறைவேற்றுதல், நம்பிக்கை, உள் மற்றும் வெளியக தகவல் தொடர்பு, மேலும் நிறுவனங்களின் குறிக்கோள்களை புரிந்து செயலாற்றுதல் ஆகியவற்றில் அரிமா சங்கம் சர்வதேச அளவில் சிறந்து விளங்குகின்றது. எனவே, அரிமாவுடன் நிறுவனங்கள் இணைந்து தொண்டாற்றுவது சமுதாயத்திற்கு பேருதவியாக அமையும்.”

அவர் மேலும் பேசுகையில், ”வியாபாரத்தைப் பெருக்குவது மற்றும் நிறுவனங்களின் குறிக்கோளாக இருக்கக்கூடாது, தங்களை வளர்த்த சமுதாயத்திற்கு தங்களால் ஆன நன்மையை செய்வதும் முக்கியமாகும்” என்றார்.

இந்துஸ்தான் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸின் தலைவர் டாக்டர். என்.ஆர். தவே – வின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரிமா சங்கத்தின் பல தலைவர்கள் மற்றும் முக்கிய வியாபார பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நல்லி சில்க்ஸ் மற்றும் அரிமா சங்கத்தினர் இடையே மரங்கள் நடுவதற்கான ருபாய் 20 இலட்சம் ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நல்லி குப்புசாமி செட்டி அவர்களால் கையெழுத்திடப்பட்டது.

அரிமா சங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் நிறுவனங்கள் தொடர்புகொள்ள, டாக்டர். என்.ஆர். தவே, 98410 87178.

English Summary:Arimaa Association calls for corporations to engage in public service.