ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறையில் சென்னை மக்களின் வசதிக்காக சிறப்பு சுற்றுலா பேருந்துகளை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்த வருடமும் 200 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ள்தாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையின் முக்கிய சுற்றுலா பகுதியான மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் ஆகிய சுற்றுலா இடங்களுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முடிவடைகிறது. அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதியும் முடிவடைகிறது. மேலும் மற்ற வகுப்பு தேர்வுகளும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிவடைவதால் தேர்வுகள் முடிந்தவுடன் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் சென்னை மக்கள் பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம்.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “கோடை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் சுற்றுலா மையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர வசதியாக இந்த ஆண்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளோம். தேவையான இடங்களுக்கு ஏசி பஸ்களும் இயக்கப்படும். எந்தெந்த வழித்தடம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
English Summary: 200 Special Buses during Summer Holidays. Chennai Transport Corporation advice.