tirupati26316திருப்பதி திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு அதிக செலவு ஏற்படுவதாக இதுவரை இருந்துவந்த நிலை மாறி இனிமேல் திருமலையில் முகூர்த்த நாட்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் ஒரு திருமணத்தை நடத்த திருமண மண்டபம், புரோகிதர்கள், மேள தாளங்கள் ஆகியவற்றுக்காக திருமண வீட்டார்கள் அதிக செலவு செய்யப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் நேற்று ‘கல்யாணம்’ திட்டம் குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரி சாம்பசிவ ராவ் அவர்கள் கூறியதாவது:

ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் திருமணம் செய்துகொள்ள பலர் விரும்புகின்றனர். ஆனால் இவர்கள் திருமண மண்டபம், புரோகிதர்கள், மேள தாளங்கள் என பல்வேறு வகையில் செலவு செய்ய நேரிடுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, புரோக்கர்கள் கள்ள சந்தையில் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தேவஸ்தானம் சார்பில் இனி இலவச திருமணம் செய்து வைக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். திருமணம் நடந்த அரை மணி நேரத்தில் திருமண சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்படும்’ என்று கூறினார்.

இந்த அறிவிப்பு தென்னிந்தியா முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் செலவு இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்ய இந்த ‘கல்யாண திட்டம்’ பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Free marriage in Tirupathi.