Kapalicuvarar Mylapore templeசென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான யாக சால பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இந்த யாக பூஜைகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் நடைபெறும். இதனை அடுத்து இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் 10.30 வரை நடைபெறுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் டி.காவேரி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு ரு.9 கோடி செலவிடப்பட்டுள்ளது. கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு கோபுரம் மற்றும் 15 சன்னதி விமானங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய திருத்தேர், 4 சிறிய தேர்கள், அனைத்து மர வாகனங்கள், அறுபத்து மூவர் பல்லக்குகள் உட்பட அனைத்து வாகனங்களும் செப்பனிடப்பட்டுள்ளன.

கற்பகாம்பாள் சன்னதி அந்ராலயம் நுழைவாயிலில் 25.055 கிலோ எடையில் வெள்ளி தகடு பொருத்தப்பட்டுள்ளது. கபாலீசுவரருக்கு 5 கிலோவில் தங்க நாகாபரணமும் கற்பகாம்பாளுக்கு தங்கப் பாவாடைக்கு மேல் கவசம் செய்யும் பணி ரூ.156 லட்சத்திலும் செய்யப்படவுள்ளன. குளத்தின் தூய்மைப் பணி, நீர் மறு சுழற்சி, புதிய நீர் வீழ்ச்சி அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக ரூ.9 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான யாக சாலைகள் அமைத்தல், அலங்காரம், ஹோம குண்டங்கள் அமைத்தல், ஹோம திரவியங்கள் ஆகியன உபயமாகப் பெறப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழாவுக்கு, ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் வசதிக்காக, பெருநகர சென்னை மாநகராட்சி உதவியுடன் நடமாடும் கழிவறைகள், குடிநீர் வசதிகள், சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 2 ஆம்புலன்ஸ்களும், 2 தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படும். மார்ச் 28ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் சன்னதி தெருவில் மருத்துவ குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் டி.காவேரி கூறியுள்ளார்.

இந்த கும்பாபிஷேகம் விசேஷத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டத் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோயிலின் உள்ளே 400 போலீஸாரும், கோயிலின் வெளியே கூட்டத்துக்கு ஏற்பவும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். கோயிலில் 16 சிசி டிவி கேமராக்கள் உள்ளன. கூடுதலாக கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலின் உள்புறமும், வெளிபுறமும் கண்காணிப்பு கோபுரமும், சிசி டிவி மானிட்டர் கன்ட்ரோல் பதிவு செய்யும் வசதியுடன் புறகாவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்துக்காக அன்னதானம் செய்ய விரும்புவோர் இந்து சமய அறநிலையத் துறையிடமும், காவல் துறையிடமும் முன் அனுமதி பெற வேண்டும்’ என்று கூறினார்.

சென்னை மட்டுமின்றி சுற்றுப்புற நகரங்களில் இருந்தும் கும்பாபிஷேக தினத்தன்று பெருமளவு பக்தர்கள் குவிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

English Summary : Kapalicuvarar Mylapore temple was consecrated on April 3. The intensity of care delivery