Microsoftஒரு காலத்தில் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சினாக இருந்து வந்த யாகூ நிறுவனம் கூகுள் நிறுவனம் வந்த பின்னர் அதனோடு போட்டி போட முடியாமல் திணறி வருகிறது. சியர்ச் எஞ்சின், மெயில் ஆகியவற்றில் கூகுளுக்கு இணையாக செயல்பட முடியாத யாகூ விரைவில் கைமாறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் யாகூ நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் அந்த நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாகூ நிறுவனத்தின் பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களிடம் மைக்ரோ சாஃப்ட் உயரதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திவருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை விரைவில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் முதலீட்டாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் எந்த விதமான உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்று இதுகுறித்த தகவல் தெரிந்தவர்கள் கூறினார்கள். யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் இதுகுறித்து கூறும்போது யாகூ நிறுவனத்தை வாங்குவது குறித்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதுதான் முதல் நோக்கம் என்று அவர் கூறினார். யாகூ நிறுவனத்தை பிரிக்க வேண்டும் என்பதை விட முக்கியமான துணை தொழில்களை விற்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே முதலீட்டாளர் களிடமிருந்து அழுத்தம் வந்து கொண்டே இருக்கிறது.

முக்கியமான முதலீட்டாளரான ஸ்டார்போர்ட், யாகூ நிறுவனத்தில் 1.7 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு முதலே நிறுவனத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கூறி வருகிறார். இது குறித்து மைக்ரோசாஃப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் கருத்து கூற மறுத்துவிட்டன. கடந்த 2008-ம் ஆண்டே யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாஃப்ட் முயற்சி எடுத்தது. அப்போதைய மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர் ஒரு யாகூ பங்குக்கு 31 டாலர் கொடுக்க முன்வந்தார். ஆனால் அந்த இணைப்பு முயற்சி அப்போது தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும் மைக் ரோசாஃப்ட் யாகூவை வாங்க நடவடிக்கை எடுக்கிறது.

English summary : Microsoft in talks to buy Yahoo