சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த நிதியாண்டில் (2022-23) 2,261 எல்.எச்.பி. பெட்டிகள் உட்பட மொத்தம் 2,702 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் 1955-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 70 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, “ரயில்- 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத் தரத்தில் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

கரோனா தொற்று காரணமாக, ஐசிஎஃப்-ல் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்தது. தொடர்ந்து, தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு, 2021-22-ம்- நிதியாண்டில் 3,101 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் 2022-23-ம் நிதியாண்டில் 2,702 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. ஏசி மின்சார ரயில்களுக்கான 2 ரயில் தொடர்கள், 8 மின்சார ரயில் தொடர்கள், நெடுஞ்தொலைவு மின்சார ரயில்களுக்கான (மெமு) 3 தொடர்கள், 12 வந்தே பாரத் ரயில் தொடர்கள், 2,261 எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள், டீசல் மின்தொடருக்கான 7 பெட்டிகள், ரயில்கள் ஆய்வுக்கான 11 பெட்டிகள், 5 விபத்து நிவாரண ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 2,702 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்த ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகளை ஐசிஎஃப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *