சென்னை மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து சென்னை மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நிலையில் இதன் தொடர்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரை ஒரு வழித்தடமும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையான மற்றொரு வழித்தடத்தின் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக இரவுபகலாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் அனைத்து பணிகளும் வரும் 2016ஆம் ஆண்டிற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை நகரில் மேலும் 3 புதிய மெட்ரோ ரெயில் வழித்தடங்களை உருவாக்க ஆய்வு பணிகள் நடந்து வருகிறது என மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மாதவரத்தில் இருந்து பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ஜெமினி, ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் வழியாக கலங்கரை விளக்கம் வரை ஒரு பாதை உருவாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது இந்த பாதை பழைய மகாபலிபுரம் சாலை வழியாக சிறுசேரி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் தூரம் 41 கிலோ மீட்டர். இந்த வழித்தடம் உருவாக்கப்பட்டால் சென்னையில் நீளமான மெட்ரோ ரெயில் வழித்தடமாக இது இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் 2-வது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலும், 3-வது வழித்தடம் மாதவரத்தில் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், வர்த்தக மையம், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் வரையிலும் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தூரம் 32 கிலோ மீட்டர். இந்த புதிய வழித்தடங்களை அமைக்க ரூ. 45 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்களின் ஆய்வு பணிகள் தற்போது அதிகாரிகளால் மும்முரமாக நடந்து வருவதாகவும் இந்த பாதையில் சுரங்க பாதைகள், மேல்மட்ட பாதைகள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
English Summary : Chennai metro corporation works started for 3 more metro lines in Chennai.