சென்னை மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது மின்சார ரயில் சேவை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம். சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றாகி விட்ட மின்சார ரெயில் சேவை சென்னை நகரை புறநகர் பகுதிகளை எளிதில் இணைக்கிறது. கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, மூர்மார்க்கெட், அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு நாள் தோறும் 250க்கும் மேற்பட்ட ரெயில்சேவை பயணிகளின் நலன்கருதி இயக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பலதரப்பட்ட பயணிகளுக்கு எளிதான மற்றும் குறைந்த கட்டண பயணமாக மின்சார ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால், எத்தனை ரெயில்கள் விட்டாலும் ‘பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாசல்களில் தொங்கி கொண்டே பயணம் செய்கின்ற நிலை உள்ளது.

மேலும் பரங்கிமலைக்கு மட்டும் ஒரு சிறப்பு சேவை தினமும் இயக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து காலை 8.32 மணிக்கு கிளம்பி பரங்கிமலைக்கு 8.58 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கடற்கரை நிலையத்திற்கு 9.40 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சேவை கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடற்கரையில் புறப்படும் இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். பரங்கி மலையில் இருந்து புறப்படும்போது கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்காநகர், கோட்டை, ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு இந்த சேவை மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. 9.40 மணிக்கு கடற்கரை திரும்பும் இந்த ரெயிலில் பயணம் செய்பவர்கள் 10 மணிக்கு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக இருந்தது. மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய பாதையில் இந்த ரெயில் சேவை இடம்பெறாமல், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படக்கூடிய மெயின்பாதையில் சென்று அதே பாதையில் திரும்புவதால் இந்த ரயில் சிக்னல் உள்பட எவ்வித இடையூறும் இன்றி தங்கு தடையின்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடற்கரை- பரங்கிமலை மின்சார ரெயில் சேவை கடந்த வாரம் முதல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக எந்தவித முன்னறிப்பும் இன்றி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப காரணத்திற்காக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரெயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தை பயணிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். கோட்ட மேலாளரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அவருடன் பயணிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசுகின்றனர்.

கடந்த 10 வருடத்திற்கு முன்பு வரை காலை 8 மணி, 8.30 மணி, 9 மணி ஆகிய நேரங்களில் 3 சேவை இயக்கப்பட்டன. ஆனால் தற்போது உள்ள ஒரே சேவையையும் ரத்து செய்திருப்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பயணிகள் தரப்பில் தெரிவித்தனர்.

English Summary : Sudden cancellation between Chennai Beach railway station – Parangi malai after 40 years service.