சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அடிக்கடி சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டத்தை அடுத்து நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதி சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரி செய்தனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் நேற்று ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், பாரிமுனையில் இருந்து கோயம்பேடு சென்ற மாநகர பேருந்து ஒன்றின் சக்கரம் சிக்கிக்கொண்டது. ஆனால் டிரைவர் சாதுரியமாக பேருந்தை வெளியே எடுத்துவிட்டார். தொடர்ந்து அதே பகுதியில் 2 முறை பள்ளம் ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில், மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சாலையை சீரமைக்கும் பணியில் இறங்கினர். 9 மீட்டர் அளவுக்கு சாலை வெட்டப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து நியூ ஆவடி சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
இதேபோல் சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் திருவள்ளுவர் சாலையில் நேற்று காலை 6 மணியளவில் 10 அடி ஆழத்துக்கு ‘திடீர்’ பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து அப்பகுதியினர் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 2 லாரி மணல் மற்றும் கற்களை கொண்டு பள்ளத்தை அடைத்தனர். இந்த பள்ளம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் உடையவில்லை. குழாய் பழுதடைந்திருந்தால் வெளியே வந்திருக்கும். திடீர் பள்ளத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்’ என்று கூறினார்.
மேலும் தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலை, ராஜமன்னார் தெருவில் சாலைக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் அந்த தெருவில் புதிய சாலை போடப்பட்டது. நேற்று அந்த தெருவில் குடிநீர் வினியோகிக்க குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி வந்தது. அப்போது திடீரென்று லாரியின் சக்கரங்கள் சாலையில் புதைந்தது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் கீழே இறங்கி பார்த்தபோது 4 அடிக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. பொதுமக்கள் சேர்ந்து லாரியை வெளியே கொண்டுவர போராடியும் முடியவில்லை. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நகர சாலைகளில் தொடர்ந்து ஏற்படும் திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
English Summary: 3 Pits on the Road in oneday at Chennai.