palava6116பல்லாவரம் சந்தை சாலையில் இருந்து குன்றத்தூர் சாலையை இணைக்கும் வகையில் ரூ.68.86 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனை தற்போது தீர்ந்துவிட்டதால் இந்த பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் போக்கு வரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் வழியாக குன்றத்தூர் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும், விமான நிலையத்தில் இருந்து குன்றத்தூர் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சந்திப்பில், காலை நேரங்களில் மட்டுமே ஒரு மணி நேரத்தில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதுவே, பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, இந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை அடுத்து இந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் கடந்த 3 ஆண்டுகளாக புதிய மேம்பாலம் கட்டும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டதால் இந்த மேம்பால பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.68.86 கோடி செலவில் 1,038 மீட்டர் தூரத்துக்கு புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பணிகள் தொடங்குவதில் சிக்கல் இருந்தது. சிக்கல் தீர்ந்துள்ள நிலையில், புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 33 மாதங்களில் இங்கு மேம்பாலம் கட்டும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

English Summary: Solved the problem of land acquisition. Start pallavara flyovers works.