கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்திருந்த நிலையில் நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ் பெற்ற முதல் நாளிலேயே சுமார் 31 ஆயிரம் பேர் தங்களது பிளஸ் 2 கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் ஜூலை 15 முதல் 27 வரை பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்ற மாணவர்கள் உடனடியாக ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து வருகின்றனர்.
மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் திட்டத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன், பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை தொடக்கி வைத்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் திட்டம் கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 36.63 லட்சம் மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மட்டும் 12.92 லட்சம் மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு பள்ளிகளின் மூலம் மட்டுமில்லாமல், மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்தும் ஆன்-லைன் மூலம் கல்வித் தகுதியைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary : 31,000 students registered in Employment Exchange.