pgmedicalcourses7416முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 4ஆம் தேதி சென்னையில் தொடங்கியது என்பதையும் முதல் நாளில் நடந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக வந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கு நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் 360 இடங்கள் நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை, முதுநிலைப் பட்டயம், 6 ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-18-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள 854 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் நாளான ஏப்ரல் 4-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான 14 இடங்கள் நிரம்பியது போக மீதமுள்ள 840 இடங்களுக்கு பொதுப்பிரிவினருக்காக 575 பேர்களுக்கு கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களில் 453 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
முடிவில், அரசுக் கல்லூரிகளில் 311 இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் 49 இடங்கள் என மொத்தம் 360 இடங்கள் நிரம்பின. இதுவரை மொத்தம் 374 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மீதம் உள்ள 480 இடங்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் என்று தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ஆம் தேதி வரையும், ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

English Summary: 374 places full for postgraduate medical courses.