முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமாகிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாமின் பன்முகத் தன்மையை நினைவு கூறும் வகையிலான நான்கு புதிய அஞ்சல் தலைகளை இன்று அஞ்சல் துறை வெளியிடுகிறது.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக, நான்கு அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல் துறையிடம் ஏற்கனவே பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்டோபர் 15-ஆம் தேதியான இன்று அஞ்சல் தலைகளை வெளியிடுமாறு, தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அஞ்சல் துறை இயக்குநரகம் அப்துல் கலாமின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும், அவரின் மறைவை நினைவு கூறும் வகையிலும், இன்று டில்லியில் பிற்பகல் 3 மணிக்கும், தமிழகத்தில் பிற்பகல் 3.35 மணிக்கும் நான்கு புதிய அஞ்சல் தலைகள் வெளியிடப்படவுள்ளன. ஐந்து ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலை, விவரங்கள் அடங்கிய அஞ்சல் உறையை, தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் சார்லஸ் லோபோ வெளியிடுவார் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் 21ஆம் தேதி முதல் விஜயதசமி விடுமுறை நாட்கள் வருவதால் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தடையில்லாமல் தபால்கள் கிடைக்க அஞ்சல் சேவைக்கு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இதன்படி விரைவு அஞ்சல், பதிவு செய்யாத முதல் நிலை அஞ்சல் சேவைகள் மட்டும் 21-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளிலுள்ள அனைத்து தலைமை, துணை அஞ்சல் விநியோக அலுவலகங்கள் வாயிலாக இந்த சேவைகள் வழங்கப்படும் என்றும் அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
English Summary : 4 new stamps released in memory for Abdul kalam birthday.