மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இந்தியர் அனைவருக்கும் ஆதார் அட்டை எண் வழக்கும் திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 5 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 671 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடு- கட்டுப்பாட்டு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் உறுதி செய்துள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தற்போது ஆதார் அட்டை என்பது இன்றியமையாததாக மாறியுள்ளதால் ஆதார் எண்ணைப் பெற இப்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள், சமூகநலத் திட்டங்களைப் பெறுவோர் என பல்வேறு தரப்பினரும் ஆதார் எண்ணைப் பெற்று, அதனை வங்கிக் கணக்குடன் இணைத்து வருகின்றனர்.
இது குறித்து ஆதார் தொடர்பாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடு- கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் அவர்கள் கூறியதாவது: ஆதார் எண்ணைப் பெறுவதற்கு முன்னதாக, ஒவ்வொரு தனிமனிதரும் தங்களது அடிப்படை விவரங்களை அதற்கான படிவத்தில் நிறைவு செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களை ஆதார் எண் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அளிக்க வேண்டும். இதற்கென தமிழகம் முழுவதும் 636 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 70 மையங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் படிவங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்தப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகே, கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் போன்றவற்றைப் பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்காக இப்போது கூடுதலாக 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 32 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆதார் எண்ணைப் பெற முதலில் மக்கள்தொகை பதிவேட்டில் நமது விவரங்கள் பதிவு செய்யப்படும். இதற்கென தனியாக மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளில் நமது பெயர், முகவரி, கண்ணின் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு ஆதார் எண் வழங்கப்படும்.
தனிநபர்களின் அடிப்படை விவரங்களுடன், அவர்களது கருவிழிப் படலம், கைவிரல் ரேகை ஆகியவற்றைச் சேகரிக்கும் பணியை தமிழகம் முழுவதும் கடந்த 2011 ஜூன் மாதத்தில் தொடங்கினோம். கடந்த 2014 அக்டோபரில் அதை முடித்தோம். ஆதார் எண் வழங்குவதற்காக, தமிழகம் முழுவதும் 636 நிரந்தர முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் ஆதாருக்கான படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இது வரை பெற்றவர்கள்: தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேரின் விவரங்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில், இதுவரை 5 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 319 பேரின் அடிப்படை விவரங்களும், கண் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகள் உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இது மொத்த இலக்குடன் ஒப்பிடும் போது 82.23 சதவீதமாகும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு, 5 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 671 பேருக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது, 76.51 சதவீதமாகும்.
ஆதார் எண்ணைப் பெற இரண்டு வழிகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்து அந்த விவரங்களின் அடிப்படையில் ஆதார் எண்ணைப் பெறுவது. மற்றொன்று நேரடியாக ஆதார் எண் வழங்கும் மையங்களுக்குச் சென்று எண்ணைப் பெறுவது. இவற்றில், தமிழகமானது மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து அதன் அடிப்படையில் ஆதார் எண்ணைப் பெறும் வழியைப் பின்பற்றி வருகிறது. இந்த முறையை தமிழக அரசே தேர்ந்தெடுத்தது. தமிழகத்துடன் மேற்கு வங்கம், ஒடிசா, அருணாசலப் பிரசேதம், அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களும் மக்கள்தொகை அடிப்படையில் ஆதார் எண்ணைப் பெறும் வழியைப் பின்பற்றுகின்றன.
இந்த முறை மூலமாக, மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவு, குடும்ப அட்டைகள், மாநில அரசுத் திட்டங்களில் இணைந்துள்ள பயனாளிகள் உள்ளிட்டோரை சரியான முறையில் கணக்கிட முடியும். இதனால், போலிகள் தவிர்க்கப்படும். மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் எண்ணைப் பெற்றால், அரசுத் திட்டங்களை உண்மையாகப் பயன்படுத்தும் நபர்களின் விவரங்கள் தெரிய வரும். ஆதார் எண் அளிக்கும் பணியை ஒவ்வொரு வாரமும் வருவாய் நிர்வாக ஆணையாளர் ஆய்வு செய்து வருகிறார். மக்கள்தொகைப் பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்யவோ, ஆதார் எண் பெறவோ எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மாநிலத்தில் உள்ள நிரந்தர முகாம்களுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் அதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடங்கலாம் என கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
English Summary : 5.15 crore Aadhaar numbers are provided for people in TamilNadu.