நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளதால், விரைவில் வழக்குகளை முடித்து வைக்க மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் மூலம் பல வழக்குகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை ஒரே நாளில் லோக் அதாலத் மூலம் 19,318 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்குகளின் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ. 104 கோடியே 42 லட்சத்து 76,123 மதிப்பிலான இழப்பீட்டுத் தொகையை லோக் அதாலத் பெற்று கொடுத்துள்ளது.

இந்த மாதத்துக்கான லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம், மாநில தலைமை நீதிபதி ஆகியோரின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்றது.

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி, பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாடுகள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றிற்கு தீர்வு பெற்று கொடுத்தன. மேலும் இந்த நீதிமன்றங்களில் குடும்ப பிரச்னை, தொழிலாளர் தொடர்பான வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மூலம் மொத்தம் 63,491 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 19,318 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்மூலம் முறையீட்டாளர்களுக்கு ரூ. 104 கோடியே 42 லட்சத்து 76,123 மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

English Summary : 19,000 cases solved in a single day by Lok Adalat with Rs. 104,42,76,123 as compensation.