சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்புப் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், தமிழக காவல்துறையும் கூட்டாக ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கி வரும் மெட்ரோ ரயிலில் சமீபத்தில் காவல்துறை உயரதிகாரிகள் பயணம் செய்தனர். இந்த பயணத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. அசோக்குமார், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர் ரவிக்குமார், மாநில உளவுப் பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன், சென்னை போலீஸ் உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜு ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது ரயிலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

பயணம் முடிந்தவுடன் காவல்துறை உயர் அதிகாரிகளும், சென்னை மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளும் மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். தற்போது மெட்ரோ ரயில் நிலையப் பாதுகாப்புப் பணியில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது உள்பட பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த முதல் கட்ட ஆலோசனை மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயில் நிலைய பாதுகாப்பில் கூடுதலாக பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் போலீஸ், தனியார் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொள்வர்.

மேலும், ரயில் நிலையங்களில் நிகழும் குற்றங்கள் தொடர்பான விசாரணை சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தமிழக காவல்துறையே மேற்கொள்ளும் என்று முடிவு செய்யப்பட்டது.

English Summary: Tamilnadu Police Department is going to join with Chennai Metro for Metro Train Protection.