இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று மொத்தம் ஐந்து பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தண்டையார்ப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 4 வது மண்டல அலுவலகத்தில், மண்டல அதிகாரியான கே.சவுரிராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து அவரிடம் நேற்று ஐந்து பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.,

நேற்று சுயேட்சை வேட்பாளரான ‘டிராபிக்’ ராமசாமி, பத்மராஜன், எம். அகமது ஷாஜகான், இந்திய குடியரசு கட்சி( அம்பேத்கர்) சார்பில் டி. ரவி பறையனார், இந்திய மக்கள் கட்சியை (மதச்சார்பற்றது) சார்ந்த ஆர். ஆபிரகாம் ராஜாமோகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியின் அஇஅதிமுக வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் இரண்டொரு நாட்களில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை திமுக உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : By-election for R.K.Nagar will be conducted on 27th of this month. 5 people nominated for this by-election on first day.