தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 550 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் ஆண்டாங்கோயில்புதூரில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய அவர் மேலும் கூறியது:
பொங்கலை முன்னிட்டு முதல்வர் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ. 2,000 கோடி ஒதுக்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 550 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 8, 9-ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள வேலைநிறுத்தத்தில் எங்களது அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்க மாட்டார்கள். நிச்சயமாக அனைத்துப் பேருந்துகளும் ஓடும். பொங்கலுக்கு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். பேருந்து நிலையங்களில் பயணிகள் வசதிக்காக மொபைல் டாய்லட், உயர் மின்கோபுரம் அமைத்து சிறப்பு வசதி செய்து கொடுத்துள்ளோம்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்னை போக்குவரத்து கழகத்தில் முதல் நாளில் 80,000 பஸ் பாஸ் வழங்கினோம். பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் சீருடையுடன் இருந்தால் அவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். திருவாரூர் இடைத்தேர்தலில் நிச்சயம் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம். அதிமுக வேட்பாளரை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் விரைவில் அறிவிப்பர் என்றார் அவர்.