பங்கு விலக்கல் மூலம் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் 76 சதவீத பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. மீதமுள்ள 24 சதவீத பங்குகள் அரசின் வசம் இருக்கும்.
இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பினை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகளில் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் மத்திய அரசின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் மதிப்பு
ஏர் இந்தியா பங்குகளை வாங்கும் நிறுவனத்தின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.5,000 கோடியாக இருக்க வேண்டும் என அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இதன் படி பார்த்தால் இந்திய நிறுவனங்களில் அதிகபட்சமாக இண்டிகோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.3,800 கோடியாக இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் எதிர்மறை மதிப்பில் இருக்கின்றன. அதனால் இந்த நிறுவனங்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்துதான் போட்டியிட முடியும்.
இந்தியாவை சேர்ந்த இண்டிகோ நிறுவனம் ஏர் இந்தியா வின் வெளிநாட்டு பிரிவை வாங்குவதற்கு விரும்புவதாக அறிவித்தது. ஏர் இந்தியாவின் விமான நிலைய பணியை கையாள விரும்புவதாக துருக்கியை சேர் ந்த செலிபி நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் ஏர் அரேபியா நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்க விரும்புவதாக அறிவித்துள்ளது.
மேலும் ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியா பங்குகளை வாங்க திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதேபோல ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க வேண்டும் என்றால், பல விஷயங்களில் வாங்கபோகும் நிறுவனத்துக்கு தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஏர் இந்தியாவின் தற்போதைய பணியாளர்கள் குறித்து வாங்கப்போகும் நிறுவனத்திடம் திட்டம் இருக்க வேண்டும் என மத்திய அரசின் விதிமுறைகளில் இருப்பதாகத் தெரிகிறது.
விமான நிலைய அனுமதி ?
மேலும் வாங்கும் நிறுவனங்களுக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. தற்போது அனைத்து விமான நிலையங்களிலும் ஏர் இந்தியாவுக்கு அனுமதி இருக்கிறது. வாங்கப்போகும் நிறுவனத்துக்கு இந்த அனுமதி எவ்வளவு காலம் கிடைக்கும் என்பது விளக்க வேண்டும் என்று செலிபி ஏவியேஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முரளி ராமசந்திரன் கூறினார்.
English summary: 76% of Air India and Air India Express shares Sells: Central government announcement.