சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. நிறுவனத்தின் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பிரிவை பலப்படுத்துவதற்காக சுமார் 100 நிறுவனங்களில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

2017-ம் ஆண்டு வரையில் நிறுவனம் ரூ.3,000 கோடிவரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.7,000 கோடி அளவுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் கூறினார். மொபைல் ஸ்டார்ட் அப் பிரிவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 2017-ம் ஆண்டு வரை 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம். மேலும் புதிய முதலீடுகள் செய்ய இருக்கிறோம். ஸ்மார்ட் போன் சந்தையை தாண்டி இதர பிரிவுகளிலும் கவனம் செலுத்த இருக்கிறோம்.

சீனாவில் விற்கப்படும் பொருட்களில் பலவற்றை இந்தியாவில் விற்கவில்லை. சீனாவில் 30 முதல் 40 பொருட்கள் வரை விற்பனையில் உள்ளன. அங்கு என்னென்ன பொருட்களை விற்கிறோம் என்பது குறித்த அனுபவத்தை வழங்க மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மையத்தை திறந்தோம். எலெக்ட்ரிக் சைக்கிள், ஸ்மார்ட் ஷூ, ஸ்மார்ட் குக்கர், லேப்டாப் உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அனைத்து பொருட்களும் இணையம் சார்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். இந்த பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தியாவில் அறிமுகம் செய்வோம். நாங்கள் சீனாவில் விற்கும் அனைத்து பொருட்களையும் இந்தியாவில் விற்க முடியாது. குறிப்பாக சீனாவில் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தை விற்கிறோம். அதில் நீரை சேமிக்க முடியாது. ஆனால் இந்தியாவில் விற்கும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் பெரும்பாலும் நீரை சேமிப்பது போல் இருக்கும். அதனால் எங்களது சாதனத்தை சந்தைப்படுத்துவது கடினம் என்று மனு கூறினார்.

English Summary: xiaomi Plan to invest a 7000 Crores in 100 Start Up Companies.