திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம் அன்று குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே திருமலையில் உள்ள நான்கு மாடவீதிகள் உள்பட அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியின் 4-வது நாள் நிகழ்ச்சிகளாக நேற்று யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை மூலவர் வெங்கடாஜலபதி, வகுளமாதா தேவி, விமான வெங்கடேஸ்வரர், வரதராஜசாமி, கருடாழ்வார், யோகநரசிம்மர், பாஷிங்கார் மற்றும் பேடி ஆஞ்சநேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கலச ஸ்நாபன திருமஞ்சனம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது. இரவு யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. இந்த மகா சாந்தி திருமஞ்சனம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான இன்று (வியாழக்கிழமை) மகா கும்பாபிஷேகம் காலை 10.16 மணியில் இருந்து 12 மணிக்கிடையே நடக்கிறது. அப்போது கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலவர் வெங்கடாஜலபதிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும் நேரத்தில் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கும்பத்தில் இருந்து ஜீவசக்தியை மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் மூலவருக்கு நைவேத்தியம், அட்சத தாரோபணம், பிரம்மாகோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்பசாமி மட்டும் கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.