சென்னை வார விழா வரும் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியது:
சென்னை நகரம் 1639, ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று உருவானதாகக் கூறப்படுகிறது. அதாவது, 1639-ஆம் ஆண்டுதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர் கட்டினர். அதுதான் சென்னை நகரம் உருவாகக் காரணமாக அமைந்தது. எனவே, ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு நம்ம மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற தலைப்பில் சென்னை வார விழா ஆக.19 முதல் 26-ஆம் தேதி வரை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை மாநகரம் அனைத்து வகையிலும் நன்றாகவே உள்ளது. பல்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட சென்னை நகரத்தின் பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கொண்டாட்டம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள கட்டடங்கள், கல்வெட்டுகள், புராதன சின்னங்கள், கோயில்கள், முக்கிய சுற்றுலாத் தலங்கள் போன்றவை குறித்து ஒவ்வொரு நாளும் பேரணி, ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு, நாடகம், பேச்சுப் போட்டி, விநாடி வினா, புத்தக வாசிப்பு, கதை சொல்லல் மூலம் எடுத்துரைக்கப்பட உள்ளது.
மேலும் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50-ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் பொன்விழாக் கொண்டாட்டமும் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இச்சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி பாரம்பரியமிக்க கட்டடங்களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார் எஸ்.முத்தையா.