கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார்.
அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மீண்டும் கொச்சிக்கு திரும்பி தரையிறங்கியது.
ஆய்வுப் பணி தாமதம் ஆனதால், மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.