டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ரேடியன் என்ற பெயரில் புதிய 110சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள டி.வி.எஸ். ரேடியன் மோட்டார்சைக்கிள் இளம் தலைமுறையினரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சேசிஸ், ஒற்றை கிராடிள் டேபுலர் ஃபிரேம் கொண்டு உருவாகியிருக்கும் ரேடியன் மோட்டார்சைக்கிள் சிறிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் ஊரக பகுதிகளில் உள்ளவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய டி.வி.எஸ். ரேடியன் மோட்டார்சைக்கிள் டி.வி.எஸ். ஸ்டார்சிட்டி பிளஸ் போன்றே 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர் @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. புதிய 110 சிசி மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 69.3 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி தெரிவித்துள்ளது.
ரேடியான் மோட்டார்சைக்கிள் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது, இது இந்த பிரிவு மோட்டார்சைக்கிளில்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.
டி.வி.எஸ். ரேடியன் விற்பனை அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில் முதல் ஆண்டிற்குள் இரண்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் ஹீரோ ஸ்ப்லென்டர் மாடலுக்கு போட்டியாக அமையும்.
முன்னதாக டி.வி.எஸ். ரேடியன் கான்செப்ட் வடிவில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் தற்போதைய மாடல் பார்க்க வித்தியாசமான ஒன்றாக காட்சியளிக்கிறது.
இந்தியாவில் டி.வி.எஸ். ரேடியன் விலை ரூ.48,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.