சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” இலச்சினை, மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.

திரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” பிரச்சாரத்தை வருகிற 25-ந்தேதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துவக்கி வைப்பார்கள்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் தட்டு, கோப்பை போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிகத்துறை மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான 21 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை 5 தொழில் முனைவோர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையை நாம் அடைய முடியும். பிளாஸ்டிக் பொருட்களினால், பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்ற காரணத்தினாலே இதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சூர்யா, கார்த்திக், ஜோதிகா ஆகியோருக்கு படப்பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *