வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (செப். 9) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
4 இடங்களில் சதம்: திருச்சியில் அதிகபட்சமாக புதன்கிழமை 103 டிகிரியும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.
விருதாசலத்தில் 20 மி.மீ.மழை: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் விருதாசலம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தலா 20 மி.மீ., வேலூர், வாலாஜா, காஞ்சிபுரத்தில் தலா 10 மி.மீ.மழை பதிவானது.