திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை கிருஷ்ணர் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கருடன் சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி ஏற்றும் நிகழ்ச்சி, வேத மந்திரங்கள் ஒலிக்க வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது துணைவியாருடன், பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளித்தார். இவர் களுடன் மகனும் அமைச்சருமான லோகேஷ், மருமகள் பிராம்மணி, பேரன் தேவான்ஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். முன்னதாக இவர்களுக்கு பூரண கும்ப மரியா தையுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது. முதல்வர் தனது குடும்பத் துடன் ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டார். அப்போது, 2019-ம் ஆண்டின் தேவஸ்தான காலண்டர் மற்றும் டைரியை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு பெரிய சேஷ வாகனத்தில், தேவி, பூதேவி சமேதராக மலையப்பர் எழுந்தருளினார்.
காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, பெரிய, சிறிய ஜீயர் சுவாமிகளின் குழுவினர் வேத பாராயணம் செய்தவாறு மாடவீதி களில் செல்ல, இவர்களுக்கு பின் னால், பல்வேறு மாநில நடனக் கலைஞர்கள் விதவிதமான நடனங்கள் ஆடிச் சென்றனர். பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு, திருமலையில் உள்ள வாகன மண்டபத்திலிருந்து சிறிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங் காரத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
மாட வீதிகளில் சுவாமி பவனி வந்தபோது, திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர முழக்கமிட்டனர். இரவு 8 மணிக்கு அன்ன வாகன உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.