சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், கேரட் விலை உயர்வு காரணம் கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், அம்மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியது. அதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது அவற்றின் விலை உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.25 ஆகவும், ரூ.35-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.45 ஆகவும், ரூ.15-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.25 ஆகவும், ரூ.20-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.25 ஆகவும், ரூ.10-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.12 ஆகவும் உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளான வெங்காயம் ரூ.16, சாம்பார் வெங்காயம் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.26, வெண்டைக்காய் ரூ.8, முள்ளங்கி ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.10, பாகற்காய், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை தலா ரூ.15, புடலங்காய் ரூ.8, பச்சை மிளகாய் ரூ.20 என விற்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, “தற்போது கேரளாவில் இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு வழக்கம்போல காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. அதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதன் விளைவாக சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளன” என்றனர்.