தமிழகத்தில், மறு விற்பனைக்கு அனுமதிக்கப் பட்ட, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள், வரன்முறை திட்டத்திற்குள் வராமல் உள்ளதால், திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனையை தடை செய்யும் அரசாணை, 2016 அக்., 21ல், பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, நகர் ஊரமைப்பு சட்டப்படி, அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளின் விற்பனையை மட்டுமே, பதிவு செய்ய முடியும்.அதேநேரத்தில், 2016 அக்., 20க்கு முன், ‘வீட்டு மனை’ என, ஒரு முறையாவது பதிவான, மனைகளின் மறு விற்ப னையை பதிவு செய்ய, பதிவுத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி, ஏற்கனவே, வீட்டு மனையாக வாங்கிய வர்கள், அவற்றை மறு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைகள் பிரச்னைக்கு தீர்வாக, மனைகள் வரன்முறை திட்டத்தை, தமிழக அரசு, 2017 மே, 4ல் அறிவித்தது.
2016 அக்., 20க்கு முன் அங்கீகாரமின்றி உருவான மனைகள்,வரன்முறை செய்யப்படுகின்றன. அரசு அனுமதியின்படி, மறு விற்பனை செய்யப்பட்ட மனைகளை, அடுத்தடுத்து விற்பனை செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. இதனால், மறுவிற்பனை மனைகள், வரன்முறை திட்டத்தில் வராமல் போகின்றன.
நகரமைப்புத்துறை வல்லுனர்கள் கூறியதாவது: மனைகள் வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்ட பின், இதுவரை, 50 ஆயிரம் மனைகள், மறு விற்பனை அடிப்படையில், பத்திரப்பதிவுக்கு ஏற்கப்பட்டுள்ளன. இந்த மனைகளில் பெரும்பாலானவை, வரன்முறை திட்டத்தில் வரவில்லை.
எனவே, மறு விற்பனைக்கு அனுமதிப்பது தொடர்பான விதிகளில், சில திருத்தங்களை செய்து, அனைத்து மனைகளும், மறு வரையறைக்குள் வர வழிவகுக்க வேண்டும். இல்லாவிட்டால், இத்திட்டம் முடங்கி விடும்.