சென்னை: தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையின்போது பெய்யும் நீரை சேமித்து வைக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையும், ஆசிய பேரிடர் ஆயத்த மையமும் இணைந்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுக்கான வெள்ள பேரிடர் ஆயத்த திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நேற்று சென்னையில் நடந்தது. வருவாய் நிர்வாக இணை ஆணையர் லெட்சுமி வரவேற்றார். அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் பணீந்தர்ரெட்டி, ஆசிய பேரிடர் ஆயத்த மைய துணை செயல் இயக்குனர் அஸ்லாம் பர்வே பேசினர். பயிற்சி மையத்தை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் சத்யகோபால் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை பெய்துள்ள மழை குறைவான அளவிலேயே உள்ளது. அப்படிப்பட்ட மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழையை சேமிக்க அனைத்து தேவைகளையும் செய்ய சொல்லி உள்ளோம். தண்ணீர் பிரச்னை வராமல் முன்கூட்டியே நீர்நிலைகளை தூர்வார ஏற்பாடு செய்துள்ளோம். சில மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. அந்த மாவட்டங்களில், ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், இப்போதே பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைவான மழை இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.