பிரபல பேலியோ டயட் ஆலோசகர் நியாண்டர் செல்வம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதில் இதோ :
நாம் நம்மை விட வலு குறைந்தவர்களை தான் அடிப்போம், திட்டுவோம். குழந்தைகளை அடிப்பதும் இப்படிப்பட்டதுதான். மனைவியை அடிப்பவர்கள் உண்டு. அவர்கள் செய்வதும் இதே உளவியலின் அடிப்படையிலானதுதான்.
குழந்தைகளிடம் ஒன்றை செய்யாதே என சொன்னால் “ஏன்” என எதிர்கேள்வி கேட்டு விவாதிப்பார்கள். அம்மாதிரி விவாதம் முற்றினால் நாலு அடி வைத்து விவாதததை நிறுத்தலாம். ஆனால் அது அவர்களின் சிந்திக்கும், எதிர்கேள்வி கேட்கும் திறனை அப்படியே நிறுத்திவிடுகிறது. அப்பா, அம்மா சொல்வதை அப்படியே கேட்கவேண்டும் என்பது போல பழக்கிவிடுகிறது.
அப்பாவிடம் அடிவாங்கும் மகள் நாளை கணவனிடம் அடிவாங்குவார். அவருக்கு அது இயல்பு என்பது போல மனதில் பதிந்துவிடும்.
பல சமயங்களில் நமக்கு இருக்கும் வேறு பல கோபம், ஆத்திரத்தை குழந்தையை அடிப்பதன் மூலம் தான் தீர்த்துகொள்கிறோம்.
அடி என்பது ஸ்ட்ராடஜிக்காக குழந்தைகளை வளர்க்க உதவுமா?
உதவாது… பிள்ளைகள் ஒரு கட்டம் வரை அடிக்கு பயப்படுவார்கள். ஆனால் அதன்பின் அடி பழகியபின்னர் அதைவிட மோசமான தவறுகளை தாராளமாக செய்வார்கள். அவர்கள் மனதில் ஒரு கோபம் இருந்துகொண்டே இருக்கும்.
படிக்காத பிள்ளைகளை என்ன செய்வது? பெரிய தவறு செய்யும் பிள்ளைகளை என்ன செய்வது?
சில விசயங்களை இளவயது முதல் சரிசெய்யவேண்டும். பிள்ளை படிக்கவில்லை என்றால் அதை எல்கேஜியில் திருத்துவது எளிது. பத்தாம்வகுப்பில் திருத்துவது கடினம். அடித்தால் படிப்பு வந்துவிடுமா?
அனைத்து விசயங்களிலும் பிள்ளைகள் நம் பேச்சை கேட்கவேண்டும் என நினைக்ககூடாது. சில விசயங்கள் (படிப்பு, நடத்தை) காம்பரமைஸ் இல்லாதவை என அவர்களுக்கு தெரியவேண்டும். சில விசயங்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டுவிடவேன்டும்.
பொதுவாக பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவு செய்து, பிள்ளைகள் எதை செய்யகூடாது என பெற்றோர் சொல்கிறார்களோ, அதை அவர்களும் செய்யாமல் இருந்தால் பிள்ளைகளை அடிக்கவேண்டிய அவசியமே இல்லை.
அடிப்பதுக்கு பதில் வேறு தண்டனைகளும் தரவேண்டியது இல்லை. நம் நண்பர்களாக அவர்களை நினைத்து பேசினாலே 99% பிரச்சனைகள் சால்வ் ஆகிவிடும். அத்தகைய நட்பு அதன்பின் ஆயுள் முழுக்க தொடரும்.
ஆய்வுகளும் அன்புகாட்டபடும் குழந்தைகள் வாழ்க்கையில் மிக நன்றாக முன்னேறுவதாகவே குறிப்பிடுகின்றன… அன்பு காட்டுவது வேறு, ஸ்பாயில் செய்வது வேறு, அடிப்பது வேறு