தமிழகத்தில் 7-ம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் விடுத்துள்ள ரெட் அலர்ட் குறித்து அச்சப்படத் தேவையில்லை, அது பொதுவானது, எந்த மாவட்டதுக்கானது என்றுகுறிப்பிடவில்லை, ஆதலால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். வரும் 7 -ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்திற்கு மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்பான சுற்றறிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பியது.
இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது படி 7 -ம் தேதி தமிழகத்தில் 25 செமீ-க்கும் அதிகமான அளவு மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தது. இந்திய வானிலை மையத்தின் சார்பில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. செய்திசேனல்களிலும் ரெட் அலர்ட் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் ஒளிபரப்பியதால், மக்கள் குழப்பமடைந்தனர்.
இந்திய வானிலை மையம் வரும் 7-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்விடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அது பொதுவாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். கேரளா போன்று தனிப்பட்ட மாவட்டங்களுக்கு என்று விடுக்கப்படவில்லை. அந்த எச்சரிக்கை அறிவிப்பை ஒட்டுமொத்த தமிழகத்துக்கு என்று மக்கள் யாரும் நினைக்கத் தேவையில்லை. அது தொடர்பாக வரும் வதந்திகளையும் மக்கள் யாரும் நம்ப வேண்டாம். சென்னை வானிலை மையம் நிர்வாக ரீதியாகப் பேரிடர் மேலாண்மை துறையை எச்சரித்துள்ளது. எந்த குறிப்பிட்ட மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் கொடுக்கவில்லை.
அவ்வாறு உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறும்போதுதான் மழைகுறித்து தெளிவாகக் கூற இயலும். மேலும், இந்த அந்த குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதியான புயலாக மாறினாலும், அது ஓமன் கடற்கரையை நோக்கிச் செல்லும் அதனால், தமிழகக் , கேரளக் கடற்கரைப்பகுதிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அது உருவாகி நகரும் போதுதான் மழை குறித்து தீர்க்கமாகச் சொல்ல முடியும். அதேசமயம் அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்.
சென்னையில் இரவு நேரத்தில், நள்ளிரவு நேரத்தில் மழை தொடங்கி, அதிகாலை வரையிலும், காலை வரையிலும் மழை இருக்கும். பகல் நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை இருக்கும்.
அதேசமயம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி நகரும் போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் ஒருநாள் கனமழை இருக்கும். எந்தெந்தப்பகுதிகளில் மழை இருக்கும், எப்போது பெய்யும், எந்த அளவுக்கு மழை இருக்கும் என்பதையும் இப்போது கணிக்க இயலாது. இன்னும் இருநாட்களில் அது குறித்து தெளிவாகக் குறிப்பிடலாம்.
இந்திய வானிலை மையம் சொல்வதுபோல் 7-ம் தேதி மிகமிக கனமழை இருக்கும் என்றெல்லாம் இப்போது உறுதியாகக்கூற இயலாது. 7-ம் தேதியும் கனமழை பெய்யலாம் அல்லது முன்கூட்டியே நிகழலாம், அல்லது தாமதமாகவும் பெய்யலாம். காற்றின் வேகத்தைப்பொருத்து இது மாறுபடும்.
அதேசமயம், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் சென்னைக்கும் 7-ம்தேதி மிகமிக கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதைத் சித்தரித்து, திரித்து வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
நமக்கு குடிக்கவும், பயன்பாட்டுக்கும் தண்ணீர் தேவை. ஆதலால், மழையை வரவேற்போம். எல்லா கனமழையும் வெள்ளமாக மாறாது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது கொடுக்கப்பட்டு இருக்கும் ரெட்அலர்ட் என்பது, மலைப்பகுதி மாவட்டங்களுக்குத்தான், சென்னைக்கு அல்ல. ஆதலால், மீண்டும் டிசம்பர் 1-ம்தேதி மழைபோல வந்துவிடும் என்று அச்சப்பட வேண்டாம்.