தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைப்பதாக அறிவித்தார். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்று கூறிய ஜெட்லி, மேலும், விலை குறையும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயை விட்டுத் தர முன்வந்திருப்பதாகக் கூறினார். இதானால் இன்று காலை முதல் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசு குறையும் என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து மாநில அரசுகளும் இதே அளவுக்கு விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எனவே பாரதிய ஜனதா ஆளும் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், சத்திஸ்கர், திரிபுரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களில் கூடுதலாக இரண்டு ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறைக்கப்பட்டு பெட்ரோல் விலை ரூ.84.70 க்கும் டீசல் விலை ரூ.77.11 க்கும் விற்கப்படுகிறது.