சென்னை: தென்மேற்கு பருவ மழை தொடரும் நிலையில், ‘இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்’ என, வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை, மே, 29ல் துவங்கியது; கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, அனைத்து மாநிலங்களிலும், நல்ல மழை பெய்து உள்ளது.
இந்நிலையில், வங்க கடல் மற்றும் அரபிக் கடலில், ஒரு வாரத்திற்கு முன், இரண்டு புயல் சின்னங்கள் உருவாகின. வங்க கடலில் உருவான, ‘தித்லி’ புயல், ஆந்திரா மற்றும் ஒடிசாவை பந்தாடியது. அரபிக் கடலில் உருவான, ‘லுாபன்’ புயல், நேற்று, ஓமனில் கரை கடந்தது. இதையடுத்து, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை, மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
நேற்று சில இடங்களில், லேசான மழை பெய்தது. இன்று ‘நாளையும், நாளை மறுநாளும், கடலோர பகுதிகள் உட்பட, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துஉள்ளது.
‘சென்னையில், வானம் தெளிவாக காணப்படும்; வெப்பநிலை, அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும்’ என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, பேச்சிப்பாறையில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. ஏற்காடு, தாராபுரம், வால்பாறை, தர்மபுரி, குன்னுார், போளூர், திருப்பூர், உடுமலை பேட்டை, 3; காங்கேயம், குன்னுார், கொடைக்கானல், இரணியல், பெரியகுளம், பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலத்தில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.