ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு பூஜைப் பொருள்களை வாங்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட் உள்பட சென்னை மாநகரில் உள்ள முக்கிய கடைவீதிகளில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை வியாழக்கிழமையும், விஜயதசமி வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் கடை, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும் வாடிக்கை. இதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட், அம்பத்தூர், ஆவடி, தியாகராயநகர், வேளச்சேரி, அமைந்தகரை, கோடம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கனி, பூ மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பூக்கள் வரத்து அதிகம்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வரத்து புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது. 1 கிலோ ரோஜா பூ ரூ.300, மல்லிகைப்பூ ரூ. 450, கனகாம்பரம் ரூ.500, சாமந்திப்பூ ரூ.120- க்கும் விற்கப்பட்டது. அதேபோல், முல்லைப்பூ ரூ.300, பன்னீர் ரோஜா ரூ.80, துளுக்க சாமந்திப்பூ ரூ. 80 வரைக்கும் விற்கப்பட்டது. வழக்கமான விற்பனையைக் காட்டிலும் பல மடங்கு விற்பனை அதிகரிப்பால் நேரம் செல்ல செல்ல பூக்களின் விலை ஏற்றத்தைச் சந்தித்தது.
வாழைக்கன்று, பொரி, கடலை ஆகியவற்றின் விற்பனை மாலையில் அதிகரித்தது. இதனால் இவை விற்கப்படும் இடங்களிலும், கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொரி ஒரு படி ரூ. 20-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ. 100-க்கும், நிலக்கடலை ரூ. 110-க்கும், அவல் ரூ. 40-க்கும் நெல் பொரி ஒரு படி ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பழங்கள் விற்பனை: ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 110-க்கும் சாத்துக்குடி ரூ. 45-க்கும், கொய்யா ரூ. 80-க்கும், ஆரஞ்சு ரூ.60-க்கும், மாதுளை ரூ. 110-க்கும், திராட்சை ரூ. 75-க்கும் விற்பனையானது. வழக்கமாக வாழைப்பழம் டஜன் ரூ. 25 முதல் ரூ. 40 வரை விற்ற நிலையில், இதன் விலை டஜன் ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரித்தது.அதேபோல் காய்கறிகளின் விலையும் வழக்கத்தைக் காட்டிலும் விலை உயர்வை சந்தித்தது.
சேறும், சகதியும்: புதன்கிழமை காலையிலும், பிற்பகலிலும் சென்னை மாநகரில் பரவலாக லேசான மழை பெய்தது. இந்நிலையில், கோயம்பேடு உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இப்பகுதிகள் மழையின் காரணமாக சேறும், சகதியுமாகக் காணப்பட்டன. இதனால் மக்கள் காய்கனி மார்க்கெட்டுகளில் பொருள்கள் வாங்கிச் செல்வதில் சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.
போக்குவரத்து நெரிசல்: விடுமுறைக்காக மக்கள் ஒரே நேரத்தில் ரயில், பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து புதன்கிழமை பிற்பகல் முதலே காணப்பட்டது.
சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக நகரில் பல பகுதிகளில் புதன்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்த நிலையில், வாகன ஓட்டிகள் சாலையோர கடைகள், நிழற்குடைகளில் ஒதுங்கினர். இதனால் சாலைப் போக்குவரத்தில் சீர்குலைவு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு, தியாகராய நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வாகன நெரிசல் காணப்பட்டது. ஒரு சிக்னலை வாகன ஓட்டிகள் கடப்பதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.