தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசுவெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் பட்டாசுகளை வெடித்தால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடும் என்றும் தமிழக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பசுமை பட்டாசு என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கக் கோரி தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.