சென்னை: வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், அரபிக்கடலில் உருவான லூபன் புயல் ஆகியவற்றால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சியில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகரும்போது, வடகிழக்கு பருவக்காற்று வலுவடையும். அதன்பிறகு, தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிள்ள தெற்கு கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் நவம்பர் 1-ஆம் தேதி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலையில் சென்னையில் கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, திருவான்மியூர், கந்தன்சாவடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்துள்ளது.
புழல், செங்குன்றம், ரெட்டேரி, மாதவரம், சோழவரம், பொன்னேரியில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.