சென்னை: தீபாவளியன்று தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் வெடிக்கலாம் என்றும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று நாடு முழுவதும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.
இதனை திருத்தி, காலை வேளையில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குமாறு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன், தென் மாநிலங்களில் மட்டும் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்று கூறி, நேரத்தையும் நிர்ணயித்துள்ளது.