தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக செயல்படும் வகையிலும் ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.16 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டார்.

என்னென்ன வசதிகள்?: இதன்படி மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களில் 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தெரிவு செய்து அந்தப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம், திறன் வகுப்பறை, முழுமையான உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம், சோலார் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், வகுப்பறைகளில் கண்ணாடி இழையிலான கரும்பலகைகள், மாணவர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய விளையாட்டுத் திடல், நுண்கலைத் திறனை வளர்ப்பதற்கான வசதிகள், பள்ளிக் கட்டடங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கப்படும்.

இவற்றை உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கி தரமான கல்வியை அளிக்க இந்த அரசாணை வழிவகுக்கிறது.

இதன்படி, எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே பள்ளியில் தொடங்கி, சில பிரிவுகள் ஆங்கில வழிக் கல்வியில் மாற்றியமைப்படும். இந்தத் துறையின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரப்படி கூடுதல் ஆசிரியர்களை தேவையின் அடிப்படையில் மாறுதல் மூலம் பணி நியமனம் செய்யவும், மாணவர்கள் கல்வி மட்டுமின்றி கலை, விளையாட்டிலும் சிறந்து விளங்க அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாக அமைத்திடலாம் எனக் கருதி அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

ரூ.16 கோடி ஒதுக்கீடு: மேலும் 32 மாதிரிப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இதர வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் பள்ளி ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வீதம் 32 பள்ளிகளுக்கு ரூ.16 கோடியை நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. மீதமுள்ள ரூ.10 கோடியே 50 லட்சத்து 16 ஆயிரத்தை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு, சமூகப் பங்களிப்பு திட்டங்கள் மூலம் பெறுவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *