வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், 10 மாவட்டங்களுக்கு, 7ம் தேதி முதல், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனடியாக, கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, தமிழகத்தின் வட மாவட்டங்களில், மூன்று நாட்களாக பெரிய அளவில் பெய்யாவிட்டாலும், தென் மாவட்டங்களில், மிக கன மழையாக கொட்டி வருகிறது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில், 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மணிமுத்தாறு, குன்னுார், 6; மதுரை திருமங்கலம், 6; கொடுமுடி, அருப்புக் கோட்டை, சிவகங்கை, 4; மதுரை தெற்கு, குன்னுார், பொள்ளாச்சி, ராமநாதபுரம், 3 செ.மீ., மழை பெய்துள்ளது. வங்கக்கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் உள்ளதால், நாளை நள்ளிரவுக்கு பின், மழை துவங்கி, படிப்படியாக அதிகரிக்கும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் உட்பட, 10 மாவட்டங்களில், பரவலாக மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கடலுக்கு சென்ற மீனவர்கள், உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய, துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும். இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு இடையே, 7, 8ம் தேதிகளில் கரையை கடக்கலாம்.
அதனால், 7, 8ம் தேதிகளில், தென் மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யும். குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், 8ம் தேதி வரை, அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, குமரி முதல் மன்னார் வளைகுடா மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ளவர்கள், நாளைக்குள் கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.