தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட உள்ளன.
தீபாவளிப் பண்டிகைக்காக திங்கள்கிழமையும் (நவ. 5) அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து சனி, ஞாயிறு உள்பட 4 நாள்கள் தொடர் விடுமுறையானது. இதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி கொண்டாடுவோரில் பெரும்பாலோர் வெள்ளிக்கிழமை மாலையே குழந்தைகளுடன் புறப்பட்டுச் செல்லத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை மாலை முதல் தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதன்படி, 750 சிறப்பு பேருந்துகள் உள்பட 3,025 பேருந்துகள் வெள்ளிக்கிழமையும், 1,300 சிறப்பு பேருந்துகள் உள்பட 3,575 பேருந்துகள் சனிக்கிழமையும் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன. ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன், 1,542 சிறப்புப் பேருந்துகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 3,817 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இன்று 3,975 பேருந்துகள் இயக்கம்: இந்நிலையில் 1,700 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 3,975 பேருந்துகள் சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு திங்கள்கிழமை இயக்கப்படவுள்ளன. அத்துடன் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் 250 சிறப்பு இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.