சென்னை: கஜாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்சார வாரியம் கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல் கடந்த இரு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. போகும் போது 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அதாவது நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. இதனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்துவதற்கு இம்மாதம் 30-ஆம் தேதி வரை மின் வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் இம்மாதம் 15-இல் இருந்து 25-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த 30-ஆம் தேதி வரை மின் வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.