திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து முருகர் தேர் வீதி உலா வந்ததை பக்தர்கள் தரிசித்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரியும் அண்ணாமலையார் அம்மனுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம், 63 நாயன்மார்களின் வீதி உலா ஆகியவை திங்கட்கிழமை காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. விநாயகர் மற்றும் முருகன் தேர்கள் இரண்டும் நிலைக்கு வந்ததும், பெரிய தேர் என்று அழைக்கப்படும் சுவாமி தேரோட்டம் தொடங்கும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம்பிடித்து இழுத்து செல்வார்கள்.
பெரிய தேர் நிலைக்கு வந்ததும், இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெறும். இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச்செல்வார்கள். இதற்குப் பின்னால், கடைசியாக சிறுவர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும்.
காலை முதல் நள்ளிரவு வரை பஞ்ச ரதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சிவெகுவிமரிசையாக நடைபெறும். தேரோட்டத்தைக் காண மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மலை மீது ஏறுவதற்கு 2000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.