சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேதங்களைப் பார்வையிட, மத்திய குழு, இன்று சென்னை வருகிறது.’கஜா’ புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்கள், கடும் சேதத்திற்கு உள்ளாகி உளளன. முதல்வர் பழனிசாமி, நேற்று டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார். ‘புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்’ என, பிரதமரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்று, மத்திய குழுவை அனுப்ப, பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை இணை செயலர், டேனியல் ரிச்சர்ட் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு, இன்று மாலை சென்னை வருகிறது.மத்திய குழுவினர், நாளை காலை, முதல்வர் பழனிசாமியை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசுகின்றனர்.
அதன்பின், அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின், குழுவினர், இரண்டு பிரிவாக பிரிந்து, எங்கெல்லாம் செல்வது என, முடிவு செய்யப்படும்.நாளை மதியத்திற்கு பின், குழுவினர், திருச்சி செல்கின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, வரும், 25, 26 ஆகிய நாட்களில் சென்று, புயல் சேதங்களை மதிப்பிடுகின்றனர். வரும், 27ல், சென்னை திரும்பும் குழுவினர், மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு, டில்லி புறப்படுவர் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் தெரிவித்தார்.