உதவிப் பேராசிரியர் பணிக்கான தனித்தேர்வை எழுதி முடித்துவிட்டு நீண்ட காலமாக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்னர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் செ. அசோக்குமார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘உதவிப் பேராசிரியர் பணிக்காக நெட், செட் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு, சிறப்பு நேர்காணலை எதிர்நோக்கி 100 பார்வையற்ற பட்டதாரிகள் நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க கோரிக்கை விடுத்து இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி குரூப் ஏ, குரூப் பி பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு உடனடியாக பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.