தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கக்கூட்டம் நேற்று சென்னையில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடந்தது. இந்த விழாவில் அடுத்த மூன்று மாதங்களுக்கு திரைப்படங்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பது தொடர்பான ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் மன்னன், ‘நடிகர்களின், சம்பளம், படப்பிடிப்பு சாதனங்களின் வாடகை ஆகியவை அதிகரித்ததன் காரணமாக திரைப்படங்களின் பட்ஜெட் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பெரிய தொகை செலவு செய்து படத்தை தயாரித்தாலும் அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் திரைப்படங்கள் ரிலீஸாவதால் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கூட திரையரங்குகளில் இருந்து தூக்கப்படுகின்றன.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அடுத்த மூன்று மாதங்களுக்கு திரைப்பட தயாரிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மன்னன் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை குறித்து பேசிய எஸ்.தாணு, ‘இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே முடிவு செய்ய முடியாது என்றும், இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.