சென்னையின் பழமையான அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் 180வது ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து 20 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1835ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய கவர்னர் சர் பிரெடரிக் ஆடம் தொடங்கி வைத்த மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல், அதன் பின்னர் 1852ஆம் ஆண்டு ஆம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியாக உயர்த்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்துடனும், 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டது.

180வது ஆண்டுவிழாவின் முதல் நாளில் பாரம்பரிய நடைப்பயணம் தொடங்கப்பட்டது. 50 மாணவர்கள், 15க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நடைப்பயணத்தை கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா தொடங்கி வைக்க சுதா சேஷய்யன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.