தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு, இந்திய, ஆசிய ரக்பி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆசிய ரக்பி போட்டிகள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதன்முதலாக சென்னையில் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளை ரக்பி ரசிகர்கள் கண்டுகளிக்க இலவச டிக்கெட்டுக்களை மைதான வளாகத்திலேயே ரக்பி இந்தியா என்ற அமைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த போட்டிகள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்தியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், உஸ்பெஸ்கிஸ்தான், ஈரான் உள்பட 12 நாடுகளின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரக்பி அணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி ஈரான் அணியை 17-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. மேலும் இரண்டாவது ஆட்டத்தில் லாவோஸ், மூன்றாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நான்காவது ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.