கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் கிடையாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கஜா புயலானது தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. அரசு ஒரு புறம் தீவிரமாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கி வருகின்றனர் சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் வெளியூர்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயிலில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டுமென ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளித்து ரயில்வே வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்குள்ளும், பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.