சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதால், வடமாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நேற்று தென் கிழக்கு வங்க கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 1090 கிலோ.மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி வரும் டிசம்பர் 17ம் தேதி ஓங்கோலுக்கும் காக்கிநாடாவிற்கும் இடையே கரையை கடக்கலாம்.
இதனால் டிச.15, 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் தரைக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். மேலும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு 15, 16 ஆகிய தேதிகளுக்கு செல்ல வேண்டாம்” இவ்வாறு கூறினார்.